Tuesday, February 8, 2011

பிப்ரவரி 14- உங்கள் பயணம் எப்படி?

சமீபத்தில் பரபரப்பாக உலா வந்துகொண்டிருக்கும் ஒரு மடல், பிப்ரவரி 14ம் தேதி யாரும் பெட்ரோல் போடாதீர்கள் என்பதே. பெட்ரோல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் பெட்ரோல் போடாமல் இருக்கவேண்டும் என்பதே. சில இணையதளங்களில் கூட இது பற்றி செய்திகளும் வந்திருக்கின்றன. 


என்னைப்பொறுத்தவரை ஒரு நாள் பெட்ரோல் போடாமல் இருக்க வேண்டும் என்றால் அனைவரும் அதற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே வண்டியில் பெட்ரோல் நிரப்பக்கூடும். எப்படி பெட்ரோல் விலை உயரப்போகிறது என்ற அறிவிப்பு வரும்போதெல்லாம் அதற்கு முந்தியதினமே பெரிய வரிசையில் நின்று பெட்ரோல் போடுகிறோமோ அதே போன்ற நிலைதான் இப்பொழுதும் வரும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை. மாறாக ஒரு நாள் யாரும் தங்களது சொந்த இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில், ஆட்டோ போன்றவற்றில் பயணித்தால் எப்படி இருக்கும்? இது தான் எதிர்ப்பை காட்டுவதற்கு சரியான வழியாக இருக்கும். 


ஒரு நாள் நிச்சயம் நம்மால் பேருந்து, ஆட்டோ மற்றும் ரயிலை பயன்படுத்த முடியும். நமக்கு செலவு அதிகமாகலாம், ஆனாலும் அன்றைய தினம் நம்மால் சிறிதளவாவது பெட்ரோல் மிச்சம் செய்யப்பட்டிருக்கும். 2 நாட்களில் போட பெட்ரோல் வேண்டியது இருந்தல் 3 நாட்கள் கழித்து போட்டால் போதுமே. இப்பொழுது நிச்சயம் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். நீங்கள் இப்படி ஒரு நாள் மாற்றி பயணம் செய்யும் போது நிச்சயம் அன்றைய தினம் பெட்ரோல் போடப்போவதும் இல்லை, பெட்ரோலையும் மிச்சப்படுத்த முடியும். நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டருக்கும் அதிகமாக பெட்ரோல் நிரப்பி வாகனம் ஓட்டுபவர்கள் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் வாகனம் ஓட்டாமல் இருக்கும் பட்சத்தில் அவருக்கும் லாபம், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இழப்புதான் என்பதில் மறுப்பு உள்ளதா?


நான் 2 நாட்களுக்கு(பிப்ரவரி 14,15) பேருந்து மற்றும் ரயிலை மட்டும் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறேன். இது நம்மால் நிச்சயம் முடியும். முயற்சி செய்வோம்.