Monday, March 1, 2010

பேருந்து பயணம் ‍ - அனுபவம்


வெள்ளிக்கிழமை திடீரென்று ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. ஆன்லைனில் பஸ் டிக்கெட் கிடைக்கும் என்ற ந‍ம்பிக்கையில் தேடுகையில் "சங்கீதா" டிராவல்ஸில் 7 டிக்கெட்டுகள் இருந்தன. சங்கீதா டிராவல்ஸ் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு விலை என்று சொல்லும் பேருந்து நிறுவனம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். வேறு வழியில்லாமல் டிக்கெட்டும் புக் செய்தேன். விலை 650 ரூபாய். இதுவே ரிட்டன் டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை போட்டிருந்தால் விலை ரூ.850 ஆக கொடுக்க வேண்டுமாம். இதுவே சனிக்கிழமை என்றால் ரூ.750. இவ்வளவு பெரிய திருட்டு தனத்தை எங்குமே பார்க்க முடியாது. ஆனாலும் எத்தனை பேர் இந்த மாதிரி கொள்ளைகும்பளிடம் வேறு வழியே இல்லாமல் மாட்டிக்கொண்டு கொடுக்கும் பணத்துக்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்!

ஏ.சி பஸ் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இரவு 11 மணிக்கு வரவேண்டிய பஸ் 11.45க்கு வந்தது. பஸ் உள்ளே ஏறும் போதே கெட்ட வாடை. வேர்வைத்துளிகள் சீட்டில் அப்படியே படிந்து இருக்கைகள் ஒரு முறை கூட சுத்தம் செய்யப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியது. சரி ஏ.சி பஸ் தானே, ஏசி போட்டால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைத்துக்கொண்டேன். இருக்கையில் அமர்ந்ததும் மிகப்பெரிய ஆச்சர்யம். உலகத்திலேயே ஏசி பஸ்சில் சன்னல் திறந்து வைக்கும் வசதி கொண்ட வண்டி இதுவாகத்தான் இருக்கும். ஏசி வருவதற்கு என்று தலைக்கு மேலே எல்லாமே இருந்தது. சரி ஏசி போட்டால் போடட்டும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு இயற்கை ஏசி என்று இதையும் பொறுத்துக்கொண்டேன். பஸ் எடுக்க 12.15 ஆகிவிட்டது. கோபத்தில் இருந்த இரண்டு பேர் கூச்சல் போட உடனே வண்டியை எடுத்து விட்டார்கள். சிறிது நேரத்தில் ஏசி என்று போட்டார்களே பார்க்கலாம், புஸ்ஸ்ஸ் என்று பயங்கர சத்தத்துடன் காற்று வர ஆரம்பித்தது. இது தான் ஏசியாம். அதுவும் கூட 10 நிமிடத்தில் ஆஃப் செய்து விட்டார்கள்.

வண்டி நகரத்தொடங்கிய சிறிது நேரத்துலேயே தெரிந்து விட்டது, சீட் பயங்கர ஆட்டம் கொடுக்கிறது நிச்சயம் நிம்மதியாக தூங்கமுடியாது என்று. நான் மொத்தம் தூங்கிய நேரம் 3 மணி நேரம் தான். அதுவும் இருந்த அசதியில் தூங்கிவிட்டேன். அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. வண்டியில் உறுப்படியாக இருந்த ஒன்று என்றால் வண்டியின் வேகம் மட்டுமே. எல்லாப்பயலுக கிட்டையும் பணமிருக்கும், அவனுங்களுக்கு நம்மளைவிட்டால் வேறு வழியில்லை, அதனால் எவ்வளவு வேண்டுமானாலும் கறந்துவிடலாம் என்று எண்ணும் இது போன்ற பஸ் நிறுவனங்களை ஏன் நாம் யாரும் கண்டுகொள்வதில்லை?

இதில் எனது நண்பர் பெருமையடித்துக்கொள்கிறார், வேற எந்த பஸ்லையும் டீக்கெட் கிடைக்காட்டாலும் நிச்சயம் சங்கீதாவில் டிக்கெட் கிடைக்கும்டா, அதுல வந்திடுவேன் அப்படின்னு. வசதி எல்லாம் இருக்காது ஊருக்கு திரும்ப வரவேண்டாமா, என்ன பண்றது என்று சொல்லும் இவர்களைப்போல பலர் இருப்பதால் தான் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டமும் பெருகிவிட்டது. கொடுக்கும் பணத்திற்கு உரிய வசதிகள் இருக்கவேண்டாமா? இந்த ஒரு அனுபவத்திலேயே இனி இந்த பேருந்தில் ஏறுவதில்லை, மற்ற வண்டியில் இடமில்லை யென்றாலும் கேபின்ல உட்கார்ந்து கொண்டு செல்லக்கூட தயாராகிவிட்டேன். தெரிந்தே பணத்தை விணாக்குவதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது.

சங்கீதா டிராவல்ஸ்ல இனி பயணம் செய்ய யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். தயவு செய்து அந்த வண்டியில் பயணம் செய்து உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள். இதுவரை வேறு வழியில்லாமல் பயணம் செய்திருந்தாலும் இனி உங்கள் முடிவை மாற்ற முயற்சி செய்யுங்கள். இவர்களை விட பெயர் பெற்ற பல பேருந்துகள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் கூட இந்த கொள்ளை நடந்ததில்லை.

இது எனது தனிப்பட்ட அனுபவம்(பாடம்). உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.